தினமணி 25.07.2012
குப்பைத் தொட்டியில் மனித உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு குன்னூர் நகராட்சி நோட்டீஸ்
குன்னூர், ஜூலை 24: குப்பைத் தொட்டியில் மனித உறுப்புகள் கிடந்த சம்பவத்தின் எதிரொலியாக குன்னூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.குன்னூர் பெட்போர்டு பகுதியில உள்ள மருத்துவமனையில் இருந்து கொட்டப்பட்ட குப்பையில் மனித உறுப்புகள் இருந்தன.இதைத் தொடர்ந்து, குன்னூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அதில், ‘அறுவைச் சிகிச்சையின்போது அகற்றப்படும் மனித உறுப்புகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.இல்லையெனில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.மால்முருகன் கூறியது:
குப்பையில் இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு, வீசப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகள் ஆழமாக புதைக்கப்பட்டு, அகற்றப்பட்டன.இதைத் தொடர்ந்தே மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மனித உறுப்புகளை அப்புறப்படுவதில் அலட்சியம் காட்டும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்