தினமணி 08.11.2009
குளோரின் மாத்திரை: மாநகராட்சி ஏற்பாடு
சென்னை, நவ.7: சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 10 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, மழைக்கால நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது. சனிக்கிழமை நடத்தப்பட்ட முகாம்களில் 3,200 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.
மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டலம் 1, 3 மற்றும் 7 ஆகியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மழை தொடர்ந்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்க படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக மாநகராட்சி பள்ளிகளும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.