குழந்தைகள் மருத்துவமனையில் அம்மா உணவகம் தொடங்க பரிசீலனை
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அம்மா உணவகம் தொடங்க சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகத்துக்கு கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அம்மா உணவகங்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது. இதனையடுத்து ஏழை மக்கள் கூடும் இடங்களில் உணவகம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்படவுள்ளது.
மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் அம்மா உணவகம் தொடங்கும் திட்டம் உள்ளது. இது குறித்து அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்தவுடன் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.