தினமலர் 12.05.2010
கெட்டுப்போன புரோட்டா புளித்த இட்லி மாவு பறிமுதல்
மதுரை: மதுரை பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதி ஓட்டல்களில் கெட்டுப்போன புரோட்டா, புளித்த இட்லி மாவு மற்றும் மாட்டிறைச்சியை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் இசையமுதன் (21). மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே இருந்த சிவபார்வதி ஓட்டலில் சாப்பிட்டபின், உடல் நலக்குறைவால் மே 2 ல் இறந்தார். இதன் எதிரொலியாக மாநகராட்சி அலுவலர்கள் மதுரை ஓட்டல்களில் மே 3 முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 7.30 மணி முதல் 8.10 மணி வரை உதவி கமிஷனர் தேவதாஸ் தலைமையில், தெற்குமாசி வீதி புகாரி மட்டன் ஸ்டால், மேல வடம் போக்கித் தெரு பீலா தால்சா பிரியாணிக் கடை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் கார்த்தி, ஏ.கே.ஜெயம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஜீவா, கே.எஸ்.ஆர்.,ஓட்டலகளில் திடீர் சோதனை நடத்தினர்.திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த மாட்டிறைச்சி, குருமா, குடல் குழம்பு, கெட்டுப்போன புரோட்டா, சாம்பார், புரோட்டா மாவு, புளித்த இட்லி மாவு, காய்ந்த பூரி மற்றும் குடிநீரை பறிமுதல் செய்யப்பட்டது.பெரியார் பஸ் ஸ்டாண்ட் ராஜாராம் கடையில் கெட்டுப்போன ஜூஸ், பழங்கள், மீனாட்சி ஸ்வீட் ஸ்டாலில் புளித்த மாவில் தயாரித்த இனிப்பு வகைகள், முருகன் காபி பாரில் காலாவதியான கார வகைகள், முத்துச் செல்வி டீ ஸ்டாலில் கெட்டுப்போன மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீஸ் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருமா சிவப்பது ஏன் நேற்று ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்ட குருமாக்கள் சிவப்பாக இருந்தன. மக்களை கவர வேண்டும் என்ற நோக்கில், துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் சிவப்பு நிற ‘டை‘ பவுடரை சட்டவிரோதமாக குருமாவில் கலந்திருந்தனர். இந்த குருமாவை தொடர்ந்து சாப்பிட்டால், கல்லீரல் பாதிப்பு, குடல் புண் உட்பட பல்வேறு தீராத நோய்கள் ஏற்படும்.