தினமணி 24.08.2012
கே.கே. நகர், எ.புதூர் பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்
திருச்சி, ஆக. 23 : திருச்சி மாநகராட்சி கே.கே. நகர், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சி பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள 38,39 மற்றும் 40-வது வார்டு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாயில் அரியாற்றுப் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 16-ம் தேதி முதல் கே.கே. நகர், ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், ஐயப்ப நகர், கே. சாத்தனூர், அசோக்நகர், தங்கையா நகர், உடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைப் போக்குவதற்காக மாநகராட்சி மூலம் லாரிகளில் தாற்காலிகமாக ஆகஸ்ட் 16- தேதி முதல் 20-ம் தேதி வரை நாள்தோறும் 7 லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது அப்பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், ஆக.21, 22 தேதிகளில் மட்டும் மாநகராட்சியின் லாரிகள் மூலம் நாள்தோறும் 60 நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை (ஆக.23) மாநகராட்சியின் 11 லாரிகளுடன் கூடுதலாக இரு தனியார் லாரிகள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு குடிநீர் வழங்க மாநகர மேயர் அ. ஜெயா ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிராட்டியூர் குடிநீர் திட்ட பிரதான குடிநீர் உந்துக்குழாய் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை மாலைக்குள் சரிசெய்யப்படுமென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தால் 38,39 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாத்தனூர் பிரிவு இளநிலைப் பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்.2458558 மற்றும் 40-வது வார்டு பொதுமக்கள் கிராப்பட்டி பிரிவு இளநிலை பொறியாளர் அலுவலக தொலைபேசி எண். 2472862 மற்றும் இளநிலை பொறியாளர்கள் 9244637065 (38-வது வார்டு), 9443295493 (39-வது வார்டு),9443081883 (40-வது வார்டு- எ.புதூர்), 9443954707 (40-வது வார்டு – ராம்ஜி நகர், பிராட்டியூர்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அந்தப் பகுதிக்கு மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.