மாலைமலர் 19.02.2010
கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை: வீடுகளில் நீர்தேக்கத்தை தவிர்க்காதோருக்கு அபராதம்; கடலூர் கலெக்டர் எச்சரிக்கை
கொசுத்தொல்லை ஒழிப்புக்குழு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் இக்குழுவின் உறுப்பினர்கள் செயல்பாட்டினை விளக்கி கூறினார். குழு உறுப்பினர்கள் பேசும்போது நகரியத்தின் விரிவாக்க குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்படுவதால் கொசு ஒழிப்பு பணிகளை நகராட்சி செய்வதில் நிர்வாக பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
பஞ்சாயத்து தலைவர்களின் ஈடுபாட்டினை இப்பணிகளில் ஏற்படுத்த வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனப் பொருள்கள் காலகாலமாக பயன்படுத்துவதால் கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பது தெரிய வருவதால் கொசுக்கள் பெருகும் தற்காலிக இடங்களை அறவே இல்லாமல் செய்வதில் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
நிரந்தரமான நீர் தேக்கங்களை ஒவ்வொரு வீட்டிலும் தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்ட பிரிவுகளை பயன்படுத்தி சட்டரீதியாக நகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குனர், மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்னடர்.