தினமலர் 24.02.2010
கொசுவை ஒழிக்க நோய் தராத பூச்சிகளை உருவாக்க ஆய்வு :பொது சுகாதார துறை இயக்குனர் தகவல்
மதுரை: “”நோய்களை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க, நோய்களை தராத பூச்சிளை உருவாக்க ஆய்வு நடக்கிறது,” என பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ கூறினார்.மதுரையில் பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், “ஆசியன் பயோ சேப்டி‘ பயிற்சி கருத்தரங்கு நேற்று நடந்தது. மையத்தின் பொறப்பாளர் பி.கே.தியாகி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ பேசியதாவது: மரபணு மாற்றத்தால் பூச்சிகளை உருவாக்கி, நோய்களை தடுத்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சர்வதேச அளவில் 16 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோய்களை உருவாக்கும் கொசு போன்ற பூச்சிகளை ஒழிக்க, நோய்களை உருவாக்காத பூச்சிகளை உருவாக்க ஆய்வு மேற்கொளப்பட்டு வருகிறது. விவசாயத்தில் நோய் பாதிப்பை தடுக்க, மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லாத காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஒரிஜினல் காய்கறிகள் அழியும் வாய்ப்புள்ளது என்பதால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதேபோல பூச்சிகளிலும் உருவாக்கும்போது, அது மனித கோட்பாடுகளுக்கு உட்பட்டு, சட்டத்திற்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதை மக்கள் ஏற்றுக் கொள்வர், என்றார்.பயிற்சி அரங்கில் டாக்டர் தீபாலிமுகர்ஜி, காசநோய் ஆய்வு மைய பொறுப்பாளர் குமாரசாமி உட்பட பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.