தினமணி 20.11.2010
கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: மேயர் வேண்டுகோள்
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள எஸ்.எம்.நகரில் வெள்ளிக்கிழமை கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.
சென்னை, நவ.19: கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 10 மண்டலங்களில் உள்ள சாலைகளில் கொசுப்புழுக்கள் மற்றும் கொசு ஒழிக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை சிந்தாதிரிப்பேட்டை எஸ்.எம்.நகரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் 180 புகைப்பரப்பு இயந்திரங்களும், வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரிய 27 புகைப்பரப்பு இயந்திரங்களின் மூலமும் கொசு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் சுமார் 3,300 கிலோ மீட்டர் நீளத்துக்கு புகைப்பரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் புகைப்பரப்பும் வாகனங்கள் தங்கள் தெருக்களில் வரும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து, வீட்டின் உள்ளே போகுமாறு பார்க்க வேண்டும்.
கொசு ஒழிப்பைத் தடுக்க புகைப்பரப்பும் வாகனங்கள் வரும்போது, சிறுவர்கள் வண்டியின் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வீடுகளில் இருந்த உபயோகமற்ற 27 டன் பொருள்கள் அகற்றப்பட்டன என்றார் மேயர். மாநகராட்சி ஆய்வாளர் தா.கார்த்திகேயன், சுகாதாரத்துறை துணை ஆணையர் ஆஷிஷ் குமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.