தினமலர் 26.04.2010
கொரடாச்சேரி டவுன் பஞ்., கவுன்சிலர்கள் பதவியேற்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி டவுன் பஞ்சாயத்து புதிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி டவுன் பஞ்சாயத்தில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செந்தில்குமார் தலைவராக இருந்தார். திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்தில்குமார் முக்கிய குற்றவாளியானதால், இந்த டவுன் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து இங்குள்ள 15 வார்டுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அதில், 15 வார்டுகளையும் தி.மு.க., கூட்டணியினர் கைப்பற்றினர். நேற்று முன்தினம் டவுன் பஞ்சாயத்து முதல் கூட்டம் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடந்தது. டவுன் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் நந்தகுமார் முன்னிலையில், 15 கவுன்சிலர்களும் பதவியேற்றனர். தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னையன், பக்தவச்சலம், மணியம்மாள், கலையரசன், கலியமூர்த்தி, கண்மணி, இந்திராகாந்தி, அர்ஜுனன், பாலச்சந்திரன், அகிலாண்டேஸ்வரி, அன்வர்தீன், அமுதா, காங்கிரஸ் கட்சியை பரசுராமன், ஞானகளஞ்சியம், சிவலிங்கம் ஆகிய 15 பேரும் பதவியேற்றனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் தென்னன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.