தினமலர் 29.04.2010
கொளத்தூரில் மழை, வெள்ள தடுப்பு பணி
சென்னை : ”மழைக் காலத்தில் கொளத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் கொளத்தூர் ஏரியின் உபரி நீர் மாதவரம் ஏரியில் சேர்க்கும் வகையில், 19 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்பு கால்வாய் கட்டப்படும்,” என மேயர் சுப்ரமணியன் கூறினார்.ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கொளத்தூர் பகுதியில், 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணியை மேயர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது:கொளத்தூர் பகுதியில் ஏற்கனவே 10 கோடியே ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டது.
மேலும், இந்த பகுதியில் வேலவன் நகர், அஞ்சுகம் நகர், ஜி.கே.எம். காலனி, திருப்பதி நகர், சீனிவாசன் நகர், திருமலை நகர் போன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் 20.30 கிலோ மீட்டர் நீளத் திற்கு, 25 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.பிரதான சாலைகள், உட்புற சாலைகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுவதோடு, ஏழு கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் சேகரிப்பு கால்வாயும் கட்டப்படும். இந்த பகுதியில் மழை காலத்தில் கொளத்தூர் ஏரியின் உபரி நீர் தான், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தேங்கும். அதை தடுக்கும் வகையில், கொளத் தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மாதவரம் ஏரியில் சேர்க்கும் வகையில், மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு 19 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை இணைப்பு கால்வாய் கட்ட திட்டமிட் டுள்ளது. கொளத்தூர் பகுதிக்கு மட்டும் மாநகராட்சியும் பொதுப் பணித்துறையும் இணைந்து, 44 கோடி ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது.