தினமலர் 23.04.2010
கொளுத்துது வெயில்: வறண்டது கிணறுகள் குடிநீர் சப்ளையில் திணறுது வாலாஜா நகராட்சி
வாலாஜாபேட்டை:வாலாஜாவில் குடிநீர் எடுக்கும் பாலாற்று கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு போனதால் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது.
வாலாஜாபேட்டையில் தினசரி வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பது மாறி, 3 நாளுக்கு ஒருமுறை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் நகரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதோடு மழையும் இல்லாமல் போய்விட்டது.
மேலும் பாலாற்றில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர்கிணறுகள் அனைத்தும் நீர் இல்லாமல் உள்ளது.பாலாற்றில் மணல் சுரண்டப்பட்டு வரும்நிலையில் அவ்வப்போது குடிநீர் கிணறுகளில் சுரக்கும் நீரும் மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை கூட விநியோகிக்க போதுமானதாக இல்லை. குடிநீரை தேடி சேமித்து விநியோகம் செய்ய முயன்றால் மின்சாரம் சதி செய்கின்றது.
கீழே தள்ளியது குதிரை என்றால் பள்ளமும் பறித்தது‘ என்பது போல மின் தடையை தாண்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால் கொக்கு மீனை கவ்வுவது போல நகரத்தில் வசதி படைத்தவர்கள் பலர் வீடுகளில் மின் மோட்டார் வைத்து மொத்த குடிநீரையும் தங்கள் வீட்டிற்கே உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் குடிநீருக்கு அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது கோடைக்காலம் நிலவுவதால் கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக மக்கள் அலைய தொடங்கி விட்டனர்.ஏற்கெனவே தமிழக அரசு வாலாஜா நகராட்சிக்கு அனுப்பியிருந்த உத்தரவில் நகரத்தில் விநியோகிக்கும் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தது. நகராட்சி நிர்வாகம் வேறு வழியின்றி தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரையே குளோரின் மருந்து கலந்து தூய்மைபடுத்தி முடிந்த வரை தரமாக விநியோகம் செய்து வருகிறது.
அதற்கும் மின் மோட்டார் வைத்து உறிஞ்சிக் கொள்பவர்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை அறிந்த நகராட்சி சேர்மன் நித்தியானந்தம், கமிஷனர் பாரிஜாதம், பொறியாளர் ஆனந்தஜோதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பேரில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுப்பதை சட்ட விரோத செயல் என்பதை தெரிந்தும் அவ்வாறு ஈடுபடுபவர்கள் வரும் 25ம் தேதிக்குள் நிறுத்திக் கொள்ளா விட்டால் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேர்மன் நித்தியானந்தம் எச்சரித்துள்ளார்.