தினமலர் 03.05.2010
கோவையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
கோவை : காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் செயல்படும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சோதனை நடத்திய மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள சில டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக, மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி கமிஷனர் அருணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காட்டூர் போலீசார் இப்பகுதியில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது இப்பகுதியில் செயல்படும் மூன்று டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் காலாவதியான சிலவகை சாக்லெட்கள், நிலக்கடலை மற்றும் சத்துமாவு பாக்கெட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுகாதாரத்துறை உதவி கமிஷனர் அருணா கூறுகையில்,”பறிமுதல் செய்யப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்படும். விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.