தினமணி 01.11.2010
கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற புதிய வசதி அறிமுகம்
கோவை, அக். 31: கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான வரைபடங்களை நவீன மென்பொருள் உதவியுடன் பிடிஎப் வடிவிற்கு மாற்றும் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் ஆட்டோ டி.சி.ஆர் என்ற மென்பொருள் பயன்படுத்தி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த 2009 நவம்பர் முதல் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்லைன் சுயசரிபார்ப்பு வசதி மூலம் வரைபடங்கள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்.
வரைபடம் மாநகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில் அனைத்து ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பெற்றுக் கொண்டு கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த முயற்சியாக ஆன்லைன் மூலம் பெறப்படும் கட்டட வரைபடங்கள் மாநகராட்சியின் ஆட்டோ டி.சி.ஆர் மென்பொருள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சரிபார்க்கப்பட்டு பிடிஎப் கோப்பாக ஆக மாற்றித் தரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மனுதாரர் வரைபடத்தின் நகல், இதர இணைப்புகள் மற்றும் கட்டணங்களுடன் விண்ணப்பித்தால் சில தினங்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். இறுதி உத்தரவு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் மனுதாரர்கள் இடைத்தரகர்கள் இன்றி உடனடியாக கட்டட அனுமதி பெற முடியும்.