தினமலர் 30.12.2009
கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்க தீர்மானம் ஒத்திவைப்பு
கோவை : கோவை மாநகராட்சி எல்லையை விரிவு படுத்துவது தொடர்பான தீர்மானம், கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு இணங்க ஒத்தி வைக்கப்பட்டது.கோவை மாநகராட்சி எல்லையை விரிவு படுத்துவது தொடர்பான தீர்மானம், நேற்று நடந்த கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. மாநகராட்சி எல்லையை விரிவு படுத்துவது குறித்த அனைத்து விபரங்களும், இந்த தீர்மானத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2007ல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்ட முன் மொழிவு உட்பட பல்வேறு விபரங்களும் தரப்பட்டிருந்தன. மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள், அவற்றிலுள்ள மக்கள் தொகை, பரப்பு ஆகியவை குறித்த தகவல்களும் இடம் பெற்றிருந்தன.குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம் நகராட்சிகள், வீரகேரளம், துடியலூர், வெள்ளகிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வடவள்ளி (தொண்டாமுத்தூர் யூனியன்), தாளியூர், வெள்ளலூர், பேரூர், வடவள்ளி (மதுக்கரை யூனியன்), மதுக்கரை, இருகூர், ஒட்டர்பாளையம் பேரூராட்சிகள், சோமையம்பாளையம், பன்னிமடை, குருடம்பாளையம், விளாங்குறிச்சி, வெள்ளானைப்பட்டி, பேரூர் செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம், பட்டணம், மயிலம்பட்டி, நீலம்பூர், சின்னியம்பாளையம் கிராம ஊராட்சிகளுடன் தற்போதுள்ள கோவை மாநகராட்சிப் பகுதிகளும் புதிய கோவை பெரு நகரத்தில் இடம்பெறும்.
இந்த 30 உள்ளாட்சிகளை இணைக்கும் போது, கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி), 16 லட்சமாகவும், கோவை மாநகராட்சியின் மொத்த விஸ்தீரணம் 476 சதுர கி.மீ.,(தற்போது 105.6 சதுர கி.மீ.,) ஆகவும் இருக்கும். ஏற்கனவே, மாநகராட்சி எல்லை தொடர்பாக 2007 டிச.10ல் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்தும், மாநகராட்சியுடன் இணைய குனியமுத்தூர் நகராட்சி, இருகூர் பேரூராட்சிகள் தீர்மானங்கள் மூலம் சம்மதம் தெரிவித்ததாகவும் விளக்கப்பட்டிருந்தது.மற்ற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த தீர்மானம் தொடர்பாக, கடந்த 21ந் தேதியன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்த பின்பே, நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. வழக்கம் போல், “வழவழ‘ கதைகளைப் பேசிய கவுன்சிலர்கள், இதுபற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூடிப் பேசி முடிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறினர். தீர்மானம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.