கோவை மாநகராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்று தனித்தனியாக இடைக்கால தடை வாங்கி விடுவதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
கோவை லட்சுமி மில் சிக்னல் அருகில் உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் இறந்தனர். இதில் அந்த கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை என்றும், அதில் 2 மாடி கட்டுவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது என்றும் 3–வது மாடி அனுமதியின்றி கட்டப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்தது. அனுமதியில்லாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் இறந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து வணிக வளாகங்களையும் கோவை மாநகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இதில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், சில கட்டிடங்கள் அனுமதியே வாங்காமல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்த கட்டிடங்களில் ஆய்வு செய்து அவற்றிற்கு ‘சீல்’ வைத்தனர்.
இடைக்கால தடை உத்தரவு
கட்டிடங்களில் பார்க்கிங் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டதை தொடர்ந்து சீல் வைக்கும் பணிகளை 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் எம.கருணாகரன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 15 நாட்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் ‘சீல்’ வைக்கப்பட்ட சில கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்று இடைக்கார உத்தரவு வாங்கி வந்து விட்டனர். இதனால் அந்த கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு அவை தொடர்ந்து செயல்படுகின்றன. இடைக்கால தடை விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக கோவை மாநகராட்சி தனித் தனியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதன் பின்னர் தான் அந்த கட்டிடங்களை முடக்க முடியும். எனவே கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேக்கம்
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டிட உரிமையாளரும் தனித்தனியாக சென்று இடைக்கால தடை உத்தரவு வாங்கி வந்து விடுவதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.