தினமணி 28.08.2009
சர்வதேச பொருளாதாரப் பின்னடைவால் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியில் பாதிப்பில்லை: முதல்வர்
மதுரை, ஆக. 27: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவால் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியில் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.
தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்பத்தை கற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி முகாமை சென்னையில் இருந்து “விடியோ கான்ஃபரன்சிங்‘ மூலம் முதல்வர் மு. கருணாநிதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். அவர் பேசியது:
தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப மையத்தின் மூலம் முதன்முறையாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டிலேயே முதன்முறையாக 1997-ம் ஆண்டில் திமுக அரசு தகவல் தொழில்நுட்பத்துறைக்கென தனி கொள்கையை வகுத்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இத்துறை மேம்பாட்டுக்கென பல்வேறு சலுகைகளுடன் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையும் வெளியிடப்பட்டது.
உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினால் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியில் பாதிப்பில்லை.
2008-09ம் ஆண்டில் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா தெரிவித்துள்ளது.
2007-08ம் ஆண்டில் ரூ.28,426 கோடிக்கு மென்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2008-09ம் ஆண்டில் ரூ.36,680 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, 2008-09ம் ஆண்டில் இத்துறையில் 2.85 லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இது ஓர் அறிவுசார் துறை என்பதால் இத்துறையில் நாளுக்குநாள் மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப இளைய சமுதாயத்துக்கு கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு இணைந்து இந்த மையத்தை உருவாக்கியுள்ளன.
அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 2.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பயிற்சிக்கென மத்திய அரசு ரூ. 6 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்து, முதல்கட்டமாக ரூ. 4 கோடி வழங்கியுள்ளது.
இக்கூட்டு முயற்சி மாணவர்களின் வாழ்வியல், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்கும் என்றார் முதல்வர்.
முன்னதாக, பயிற்சி நூல்களை முதல்வர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னையில் இருந்தபடி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பெற்றுக்கொண்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. கற்பகக்குமாரவேல் கருத்துரையாற்றினார்.
முன்னதாக தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப மையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் எம்.சிவகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.
முகாமில், சுமார் 30 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்ந்திரன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன், தகவல் தொழில்நுட்பச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார், தமிழக “ஈ–கவர்னன்ஸ்‘ திட்டத் தலைவர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.