தினகரன் 05.10.2010
சாக்கடை திட்ட பணிகள் பாதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
கோவை, அக் 5: கோவை மாநகராட்சியில் மழையின் காரணமாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவை மாநகராட்சியில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது. நகரின் பெரும்பாலான வார்டுகளில் சாக்கடை குழாய் பதித்தல், கழிவு நீர் சேகரிப்பு தொட்டி (சேம்பர்) கட்டுதல் உள்ளிட்ட பணி நடக்கிறது. இதுவரை 40 சதவீத பகுதிகளில் குழாய், தொட்டி கட்டும் பணி முடிந்து விட்டது.
கோவையில் பெய்து வரும் மழையின் காரணமாக பல பகுதியில் பணி முடங்கியது. ரோட்டில் மண், ஜல்லி, கற்களை குவிப்பதால் போக்குவரத்து இடையூறு இருப்பதாக புகார் அதிகரித்துள்ளது. சிங்காநல்லூர், பீளமேடு, உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் சாக்கடை திட்ட பணியால் குடியிருப்புகளுக்கு செல்ல முடியவில்லை.
இதைதொடர்ந்து கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நகர் மேம்பாட்டு திட்ட மேற்பார்வை பொறியாளர் பூபதி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் புகார் பெறப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. சாக்கடை குழாய் பதித்த பகுதியில் ரோட்டோரங்களில் களி மண் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இந்த மண், மழையால் சகதியாக மாறி விட்டது. ரோட்டோரங்களில் மண் குவியலை அப்புறப்படுத்தவேண்டும்.
சேம்பர் அமைத்த பகுதியில் மண், கழிவு குவியல்களை அகற்றவேண்டும் என உத்தரவிடப்பட்டது. மழை நீடித்தால், கோவை நகரில் சாக்கடை திட்ட பணிகள் தடைபடும் நிலையுள்ளது. எனவே, குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கழிவு நீர் சேம்பர் கட்டுமானங்கள் காய்வதற்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. மழையின் காரணமாக சேம்பர் ஈரப்பதமாக இருப்பதாகவும், சில இடங்களில் வாகனங்கள் செல்வதால் உடையும் நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.