தினமணி 03.12.2009
சிக்–குன் குனியா: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்
தேனி, டிச.2: தேனி மாவட்டத்தில் சிக்–குன் குனியா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன் உத்தரவு பிறப்பித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
தேனியில் புதன்கிழமை சிக்-குன் குனியா தடுப்பு நடவடிக்கைகள் குறிóத்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமைவகித்து அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலாக உள்ளதாகக் கண்டறியப்பட்டு, சுகாதாரத் துறை மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுபடுகிறது.
இந் நோயைக் கட்டுப்படுத்த வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சிக்-குன் குனியைவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுவை ஒழிக்க சுகாதாரத் துறை அலுவலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் இணைந்து அபேட் மருந்து தெளிக்க வேண்டும். புகை மருந்து அடிக்க வேண்டும்.
நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீரை முறையாகச் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அளவு பிளிச்சிங் பவுடர் கலந்து குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் குடிநீர்க் குழாய்களில் தண்ணீரை குடித்து பிளிச்சிங் பவுடர் கலந்துள்ளதா என்பதை அறிய வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பிரதி வாரம் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்திலும் தடுóப்பு நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இதேபோல், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்த வேண்டும்.
பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு காய்ச்சல் வந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளது என்றார் ஆட்சியர். கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் செல்லத்துரை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவாஜி, மற்றும் ஆணையர்கள், செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.