தினத்தந்தி 17.06.2013
சிறுவாணியில் பலத்த மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது
மோட்டார் வைத்து உறிஞ்சும் நிலைமை ஒரு சில நாட்களில் நீங்கிவிடும்
நீர்மட்டம் மேலும் அரைமீட்டர் உயர்ந்தது. இதனால் ஒரு சில நாட்களில்
மோட்டார் வைத்து உறிஞ்சும் நிலைமை நீங்கிவிடும் என்று குடிநீர் வடிகால்
வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவாணி நீர்மட்டம்
கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி உள்ளது. கடந்த ஆண்டு
தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை
வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனால் கோவை மக்களுக்கு குடிநீர்
சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல்
தேங்கி கிடந்த பகுதியில் இருந்து மோட்டார் வைத்து உறிஞ்ச அனுமதி
பெறப்பட்டு கோவைக்கு தினமும் 4 கோடி லிட்டர் அளவுக்கு குடிநீர் சப்ளை
செய்யப்பட்டு வருகிறது.
10 சென்டி மீட்டர் மழை
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கோவையில் பலத்த
மழை பெய்யாவிட்டாலும், மழை தூறலாக உள்ளது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு
பகுதியில் நேற்று முன்தினம் 101 மில்லி மீட்டர் (10 சென்டி மீட்டர்) மழை
பெய்தது. இதனால் சிறுவாணியின் நீர்மட்டம் ஒரே நாளில் அரைமீட்டர் அளவுக்கு
உயர்ந்தது.
சிறுவாணி அணையின் மொத்த கொள்ளவு 50 அடியாகும். குறைந்தபட்ச நிலையை தொட
வேண்டுமானால், கோவைக்கு குடிநீர் வழங்க கூடிய அணையின் வால்வு பகுதியில்
நீர்மட்டம் உயர வேண்டும். 4 வால்வுகளும் தண்ணீருக்கு வெளியே உள்ளது. வால்வு
பகுதியில் இன்னும் ஒரு மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தால், தானாகவே
வால்வு பகுதி வழியாக சாடிவயல் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு
நிலையத்துக்கு வரும்.
மோட்டார் தேவையில்லை
அணையின் நீர்மட்டம் வால்வு பகுதியில் விரைவில் அதிகரிக்கும் என்பதால்,
ஒரு சில நாட்களில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் நிலைமை நீங்குவதுடன்,
கோவைக்கு கூடுதலாக சிறுவாணி நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.