தினமலர் 27.03.2010
சிவகாசி வாகன காப்பகம், கட்டண கழிப்பறை டெண்டரில் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட்டில் இரு சக்கர வாகன காப்பகம், கட்டண கழிப்பறை டெண்டர் கடந்த ஆண்டை விட ரூ.4.26 லட்சம் குறைத்து ஏலம் போனது.
சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில், இரு சக்கர வாகன காப்பகத்தில் 2010 முதல் 2013 வரை கட்டணம் வசூல் செய்யும் உரிமைக்கு டெண்டர் கோரப்பட்டது. ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த காப்பகம் 2007 -2008ல், ரூ.8.71 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது விடப்பட்ட ஏலத்தொகை சராசரி மதிப்பு அல்லது முந்தைய ஆண்டு ஏலத்தொகையை விட குறைவாக இருக்கக் கூடாது என்பது ஏலத்தின் விதி. ஆனால், இருமுறை யாரும் ஏலம் கேட்க வராததால் 2008-2009ஐ விட, ரூ.2.1லட்சத்திற்கு குறைத்து டெண்டர் விட்டுள்ளனர்.
குறைவான தொகைக்கு ஏலம் விட்டதற்கான காரணம் 2009-2010ல் நகராட்சி மூலம் இருசக்கர வாகன காப்பகம் நடத்தப்பட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.4.92 லட்சம் வருமானம் கிடைத்தது. இதில் பணியாளர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.1.98 லட்சம் வழங்கப்பட்டது. செலவு போக நகராட்சிக்கு 2,94,342 மட்டுமே கிடைத்தது என குறிப்பிட்டுள்ளனர். இதே போல் பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடத்தையும் 2007-2008 ஆண்டை விட 2.25 லட்ச ரூபாய் குறைத்து, தற்போது ரூ.3 லட்சத்து மூன்றுக்கு ஏலம் விட்டுள்ளனர்.
வாகன காப்பகம், கட்டண கழிப்பிடத்தை ஏலம் எடுத்த கான்டராக்டர்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஏல தொகையுடன் ஐந்து சதவீத தொகையை உயர்த்தி அவரே நடத்தி கொள்ளவும் அனுமதி உள்ளது. நகராட்சிக்கு ரூ. 4.26 லட்சம் இழப்பில் ஏலம் விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருக்க வேண்டும்: வாகன காப்பகம் 2007-2008ல் 8.71 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஏல விதிப்படி ஆண்டுக்கு, ஐந்து சதவீதம் வீதம் மூன்று ஆண்டுக்களுக்கு உயர்த்தி இருந்தால், 10 லட்சத்து 8 ஆயிரத்து 291க்கு குறையாமல் ஏலம் விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நகராட்சி கூறும் பல காரணங்களால், வாகன காப்பகம் தற்போது 5 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர்.
கட்டண கழிப்பறை 2007-2008ல் 5 லட்சத்து 25 ஆயிரத்து 237க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 சதவீத தொகை உயர்த்தி மூன்று ஆண்டுக்கு பின் 6 லட்சத்து 8 ஆயிரத்து 27க்கு டெண்டர் விடப்பட்டிருக்க வேண்டும். தற்போது 3 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர்.
நகராட்சி சொத்து இவ்வளவு தொகை குறைத்து ஏலம் போனது ஏன் என கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி கேட்கவில்லை. நகராட்சி, பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண வரி உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகிய வரியினங்களையும் உயர்த்தி வசூலிக்கும் வேளையில் நகராட்சி சொத்துக்களை மட்டும் குறைந்த தொகைக்கு ஏலம் விடுவது விசித்திரமாக உள்ளது.