தின மணி 16.02.2013
சீரான குடிநீர் விநியோகம் செய்ய உள்ளாட்சி அமைப்புகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
பருவ நிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பெய்யக் கூடிய மழையின் அளவை விட இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
எனவே, மக்களிடமிருந்து குடிநீர் தொடர்பாக வரக் கூடிய புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அத்தகைய இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே உள்ள குடிநீர்க் குழாய்களை சரிசெய்தல், குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளை செம்மைப்படுத்துதல், மின் மோட்டார்களை முறையாகப் பராமரித்தல், குடிநீர்க் குழாய்கள் மற்றும் குடிநீர்ப் பாதைகளை செப்பனிடுதல் போன்ற அனைத்துப் பணிகளையும் அந்தந்தத் துறை அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் தொடர்பான மக்களின் தேவைகளை, மக்களின் கோரிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் சிறப்புக் கவனம் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ராமகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு கோட்டாட்சியர் இரா.சுகுமார், ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர் (பொ) ஆறுமுகம், உதவி இயக்குநர்கள் ரூபன் சங்கர்ராஜ் (ஊராட்சிகள்), சு.கலைவாணன் (பேரூராட்சிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.