தினமணி 01.02.2010
சுகாதாரப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி
கும்மிடிப்பூண்டி, ஜன. 31: கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை ஒழிப்பது குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
÷கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு டெங்கு, பைலேரியா, மலேரியா போன்ற நோய்களை உண்டாக்கும் கொசு புழுக்களை ஒழிப்பது குறித்த இப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் வனிதா மலர் தலைமை வகித்தார். மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பணியாளர்களுக்கு நோய்களை உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்களை ஒழிப்பது பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மழை காலத்தில் வீடுகளின் அருகே கழிவுநீர் கால்வாய்களில் உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், கொட்டாங்குச்சி மற்றும் இதர பொருள்களில் மழை நீர் தேங்கி நின்றால், அதில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் வளரும். எனவே, மேற்கண்ட பொருள்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்துதல், கால்வாய்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் போன்றவை குறித்து இந்த பயிற்சியில் விளக்கப்பட்டது.
÷இதைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் பாதிரிவேடு பகுதியில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்தார்கான் செய்திருந்தார்.