செங்கம் பேரூராட்சியில் கிராம ஊராட்சிகளை இணைக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு
செங்கம் பேரூராட்சியில் 5 கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.கணேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் புருசோத்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மண்மலை, காயம்பட்டு, குயிலம், மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் ஆகிய ஐந்து கிராம ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், செங்கம் ஒன்றியத்துக்கு அரசு ஒதுக்கியுள்ள இந்திரா நினைவுக் குடியிருப்பு வீடுகள் 291, பசுமை வீடுகள் 185 ஆகியவற்றை, ஒன்றியக் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் பயனாளிகளுக்கே வழங்க வேண்டும்.
வீடுகளை ஓதுக்கீடு செய்யும்போது அதிகாரிகள் கிராமங்களை நேரில் பார்வையிட்டு பாரபட்சம் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாரபட்சமாக வழங்கியிருந்தால் அவை குறித்து ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வரதந்தாங்கள் ஏரி, சின்னஎல்லப்பன் ஏரி, ஆணைமங்கலம் ஏரி ஆகியவைகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, பொறியாளர்கள் எத்திராஜ், தமிழ்மணி உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.