தினகரன் 03.09.2012
சென்னை சம்பவம் எதிரொலி அரசு மருத்துவமனையில் எலி வேட்டை
சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் முகத்தை எலி கடித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் எலிகள், நாய்கள், பூனைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக நாய், பூனை, எலி வேட்டை வேகமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாய் பிடிக்கும் வண்டியுடன் அரசு மருத்துவமனைக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவமனை முழுவதும் வலம் வந்து, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு பகுதி உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 8 தெருநாய்களை பிடித்து சென்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் எலி தொந்தரவும் உள்ளதால், எலிகளை பிடிக்க 10 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சுமார் 500 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்பட ஏராளமான பகுதிகளில் எலிகள் சுற்றித்திருகின்றன. ஆகவே நேற்று எலிகளை பிடிக்க 10 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மருத்துவமனை வளாகத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் 8 நாய்கள் பிடிக்கப்பட்ட போதும், இன்னும் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே இந்த நாய்களையும் பிடிக்க வேண்டும் என அங்கு வரும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.