மாலை மலர் 13.09.2010
சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
: மெரீனா கடல் அழகை சைக்கிளில் சுற்றி ரசிக்கலாம் மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, செப். 13- மெரீனா கடற்கரை அழகை சைக்கிளில் சுற்றி ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது மெரீனா கடற்கரை. இதன் இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும், காற்று வாங்கவும் தினமும் திருவிழா கூட்டம் போல் கூட்டம் திரளுகிறது.
உல்லாச பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்துள்ளது. மேலும் கடற்கரையில் ரூ. 26 கோடி செலவில் பூங்காக்கள், இருக்கைகள் அமைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.
இப்போது மேலும் ஒரு சிறப்பு ஏற்பாடாக கடற்கரை அழகை ரசிக்க சைக்கிளில் செல்வதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி செய்து வருகிறது. இதுபற்றி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நீண்ட மெரீனா கடற்கரை முழுவதையும் சுற்றி வர சைக்கிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம்.
சுற்றுச்சூழலை பாது காக்கவும், சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
கடற்கரை சர்வீஸ் சாலையில் சைக்கிளில் செல்லலாம். இதற்காக கார் பார்க்கிங் மாற்றி அமைக்கப்படும். ஏற்கனவே கடற்கரையில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்கிறார்கள். சைக்கிள் ஓட்டவும் மெம் பர்ஷிப் கேட்கிறார்கள். மெம்பர்ஷிப்புக்கு விடுவதா? வாடகைக்கு விடுவதா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த புதிய திட்டம் அமல் படுத்தப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.