தினமலர் 01.02.2010
செம்மொழி மாநாட்டு பணிகள் துரிதப்படுத்த ஸ்டாலின் உத்தரவு
கோவை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.புதிய பஸ் போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.
முன்னதாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் ஊர்வலப்பாதையை பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். ஹோப் காலேஜ் பகுதியில், ஊர்வலத்தை பார்வையிடும் மேடை அமைக்கும் இடத் தை ஆய்வு செய்தார். பின், ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, ஐ.ஜி., பிரமோத்குமார், போலீஸ் கமிஷனர் சிவனாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டு ஊர்வலம் நடக்கும் போது, கோவை வரும் வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு, பீளமேடு அருகே நடந்து வரும் ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணி, மேட்டுப்பாளையம் ரோடு ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “”மாநாட்டை ஒட்டி நடக்கவுள்ள ஊர்வலம் பற்றியும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதை துரிதப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது,” என்றார்.