சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
சேலம் மாநகராட்சியில் குடிநீரை தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு மேயர் சவுண்டப்பன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் அசோகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போர்வெல் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், தெரு விளக்கு மற்றும் சாலை வசதி அமைத்து கொடுத்தல், இறந்த பணியாளர்களுக்கு சேம நலநிதி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.
நிதி உதவி
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேயர் சவுண்டப்பன் உத்தரவிட்டார். சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர்(திட்டம்) சீனிவாசன் இடுப்பு அறுவை சிகிச்சையும், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டனர்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களுக்கு ஓய்வூதியரின் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மேயர் சவுண்டப்பன் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மாற்றுத்திறனாளியான இவர் மேயரிடம் கொடுத்துள்ள மனுவில், நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாகியும் எனக்கு வேலை கிடைக்க வில்லை.
எனவே வேலைவாய்ப்பு கிடைக்க பரிந்துரை செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மின் மோட்டார் பொருந்திய மோட்டார் சைக்கிள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஓடைய புதுப்பிக்க
சேலம் மாநகராட்சி 17–வது வார்டு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மேயரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘சேலம் சாரதா கல்லூரி ஆசிரமம் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள ஓடையை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் 7 மற்றும் 16 வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் கொடுத்துள்ள மனு கொடுத்தனர். அதில், ‘தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருப்பதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகையால் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதேபோல் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு கொடுத்தனர்.
கணக்கெடுக்க உத்தரவு
இதையடுத்து மேயர் சவுண்டப்பன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி முழுவதும் எந்த இடங்களில் எல்லாம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட வேண்டியது உள்ளது. ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வராதது எத்தனை என கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அம்மா உணவக சாப்பாடு
சேலம் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலையில் அம்மா உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை பகுதியிலுள்ள 4 மையங்களில் பரிச்சார்த்த முறையில் மகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் தயாரித்த இடலி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர். குறை தீர்க்கும் கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர்கள் காமராஜ், அசோகன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.