தினமலர் 03.05.2010
சேலம் மாநகராட்சி வளாகத்தில் அண்ணாதுரை சிலை திறப்பு
சேலம்: சேலம் மாநகராட்சி வளாகத்தில் அண்ணாதுரை சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சேலம் மாநகராட்சி வளாகத்தில் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த போதிலும் சிலை திறப்பு விழா நடக்காமல் இருந்தது. அதைத்தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவின்பேரில் நேற்று சிலை திறப்பு விழா நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜா சிலையை திறந்து வைத்து பேசினார். மேயர் ரேகாபிரியதர்ஷினி, கமிஷனர் பழனிசாமி, துணை மேயர் பன்னீர் செல்வம், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், நடேசன் மற்றும் கவுன்சிலர்கள் பழனிசாமி, சாரதாதேவி, சுந்தர், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், பா.ம.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. அண்ணாதுரை சிலை திறக்கப்பட்டதையடுத்து, கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா நினைவு மருத்துவமனை 41.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. டாக்டர்கள் அறை, வெளிநோயாளிகள் உட்காரும் பிரிவு, பிரசவ பிரிவு, வெளிநோயாளிகள் அமரும் பிரிவு, மருந்தகம், கழிப்பறை, படுக்கை வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜா கட்டிடத்தை திறந்து வைத்தார். மேயர் ரேகாபிரியதர்ஷினி, கமிஷனர் பழனிசாமி, மண்டல தலைவர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ‘மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் கூட்ட அரங்கு கட்டிடம் 18 லட்சம் ரூபாயில் கட்டும் பணி துவக்கப்பட உள்ளதாக’ கமிஷனர் தெரிவித்தார்.