தினத்தந்தி 07.02.2014
சேலம், வேலூர், ஈரோட்டை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்களுக்கு திறனூட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

சேலம், வேலூர் மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்
மற்றும் கவுன்சிலர்களுக்கான 2 நாள் திறனூட்டு பயிற்சி முகாம் சேலத்தில்
தொடங்கியது.
திறனூட்டு பயிற்சி முகாம்
தமிழ்நாடு நகரவியல் பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம், வேலூர் மற்றும்
ஈரோடு ஆகிய 3 மாநகராட்சிகளை சேர்ந்த மேயர்கள், துணை மேயர்கள்,
கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சிக்கான
‘திறனூட்டுப்பயிற்சி‘ முகாம் சேலத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை
சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி
வைத்தார்.
முகாமில், 74–வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்தின் சிறப்பம்சங்கள்,
மாமன்றத்தின் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள், மேயர்
மற்றும் துணைமேயர் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள்,
மாமன்ற கூட்டம் நடத்துதல் ஆகியவை பற்றி ஓய்வு பெற்ற நகராட்சி நிர்வாக மண்டல
இயக்குனர் எஸ்.நாராயணசாமி பயிற்சி அளித்தார். தொடர்ந்து நிலைக்குழுக்கள்
அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், வார்டு குழுக்கள் அமைத்தல்,
அவற்றின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், மனித உறவுகள், உள்ளாட்சியும்
உறவுகளும், தேவை மற்றும் முக்கியத்துவம், தலைமைப்பண்பு, சுய ஊக்கம்,
நன்னெறிகள், முரண்பாடுகளை தீர்த்தல், பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள்,
தகவல் தொடர்பு, ஆகியவை குறித்து முனைவர் மனவழகன் பயிற்சி அளித்தார்.
மேயர் அறிவுரை
முன்னதாக சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் பேசுகையில்,
‘‘மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள்
எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைவராக இருந்து, மக்களோடு மக்களாக பழகி
சேவை செய்துதான், நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்கள். ஆகவே,
ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்களின் கடமையையும், நிர்வாக முறைகளையும்
தெரிந்து கொள்வது அவசியம்‘‘ என்றார்.
நேற்றைய பயிற்சி முகாமில் வேலூர் துணை மேயர் தர்மலிங்கம் மற்றும் 3
மாநகராட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு
நகரியல் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி திட்ட விளக்கவுரை
ஆற்றினார்.
இன்றும்…
இன்று(வியாழக்கிழமை) 2–வது நாளாகவும் திறனூட்டு பயிற்சி முகாம்
நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தணிக்கைத்துறை துணை இயக்குனர்நடராஜன், நகராட்சி
நிர்வாக தலைமை பொறியாளர் ஆர்.ரகுநாதன், நகராட்சி நிர்வாக மண்டல
இயக்குனர்அலுவலக உதவி திட்ட இயக்குனர் இளம்பருதி ஆகியோர் பயிற்சி
வழங்குகிறார்கள்.
நாளை(வெள்ளிக்கிழமை) 3–வது நாள் முகாமில் பெண் மக்கள் பிரதிநிதிகளுக்கான மனவளக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது.