ஜூன் மாதத்திற்குள் கொசுத்தொல்லை குறைக்கப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை மாநகரில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொசுக்கள் கழிவு நீர் கலந்துள்ள கூவம்ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற பெரிய நீர்வழிப்பாதைகளிலும் மற்றும் சிறிய நீர்வழிப்பாதைகளிலும், மழைநீர் வடிகால்களிலும் அதிக அளவு உற்பத்தியாகின்றன.
கடந்த மார்ச் 18–ந்தேதி முதல் ரூ.6.76 கோடி செலவில், பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி அனைத்து பெரிய மற்றும் சிறிய நீர்வழிப்பாதைகளிலும், நீர் ஓட்டத்திற்கு தடையாக உள்ள மணல் மேடு, ஆகாயத்தாமரை செடிகள், முட்செடிகள் மற்றும் புற்பூண்டுகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் செய்து, கொசு புழுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து நீர் வழி தடங்களிலும் நீரோட்டம் உறுதி செய்யப்பட்டு கொசுத்தொல்லை வெகுவாக குறைக்கப்படும்.
கொசுப்புழு மற்றும் கொசுத்தடுப்பு பணியில் 238 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்களும் 603 கைத் தெளிப்பான்களும், 65 பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்களும், 8 கட்டுமரங்களும் தினசரி பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொசுத்தொல்லை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.