தினமணி 28.06.2013
தினமணி 28.06.2013
ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்
கிருஷ்ணா நதி நீர் ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
அப்போது விநாடிக்கு 300-லிருந்து 400 கனஅடி தண்ணீர் சென்னை பூண்டி
ஏரிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு
வரும் பட்சத்தில் அடுத்த மாதத்திலிருந்து குடிநீர் தட்டுப்பாடு குறைய
வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
குடிநீர் பற்றாக்குறை: பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும்
வீராணம் ஆகிய ஏரிகளிலிருந்து குடிநீர் பெறப்பட்டு சென்னை நகரில்
விநியோகிக்கப்படுகிறது. தற்போது அந்த ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு
இல்லை.
சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் தற்போது 15 சதவீதம் மட்டுமே நீர்
இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும்
கால்வாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆந்திரத்தில்
இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் நிறுத்தப்பட்டது.
விநியோகம் குறைந்தது: சென்னைக் குடிநீர் வாரியத்தால் நாளொன்றுக்கு 83
கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. குடிநீர் பற்றாக்குறை
காரணமாக தற்போது அதன் அளவு 55 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் செய்யப்படும் அளவு குறைந்துள்ளதால் அதனை ஈடு செய்ய
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெய்வேலியிலிருந்து
நாளொன்றுக்கு 2.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. பூண்டி,
தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2.9 கோடி லிட்டர் குடிநீர்
பெறப்படுகிறது.
சென்னை மாநகர பகுதிகளில் 626 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 676 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக 6,000 மற்றும் 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 308 லாரிகள் மூலம்
குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 391 லாரிகள் மூலம்
நாளொன்றுக்கு 3,700 நடைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது.
ஜூலை மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு
கிடைக்ககூடும். ஆகஸ்ட் மாதத்தில் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 180
மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் குடிநீரின் அவசியம் கருதி அதனை சிக்கனமாக பயன்படுத்துமாறும்,
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குமாறும் அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.