தினமணி 21.09.2010
தஞ்சையை மாநகராட்சியாக அறிவிக்க வலியுறுத்தல்
தஞ்சாவூர், செப். 20: தஞ்சாவூரை மாநகராட்சியாக அறிவித்து, மாநகராட்சி கட்டடத்துக்கு ராஜராஜ சோழன் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காமராஜர் தேசிய பேரவை தலைவர் வழக்குரைஞர் கோ. அன்பரசன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நகரிலுள்ள சாலைகளை அகலப்படுத்தியும், புதிதாக பூங்கா அமைப்பதும் தஞ்சையில் வசிக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழனின் சமாதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அவரது பெயரில் மணிமண்டபம் கட்டி, அதனை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். இதற்கான தீர்மானம் நகராட்சியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது