தடையில்லா சான்று பெறாமல் கட்டப்படும் அரசு அலுவலகம்: செஞ்சி பேரூராட்சித் தலைவர் புகார்
பேரூராட்சியின் தடையில்லா சான்று பெறாமல் செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படுவதாக பேரூராட்சி மன்றத் தலைவர் செஞ்சி மஸ்தான் புகார் தெரிவித்துள்ளார்.
செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், அதன் அருகில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து அதன்படி ரூ.45 லட்சத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
செஞ்சி பேரூராட்சிக்கு உள்பட்ட இந்த இடத்தில் தடையில்லா சான்று பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு வருவதாக பேரூராட்சி மன்றத் தலைவர் செஞ்சி மஸ்தான் கூறினார். கட்டடப் பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
பொதுமக்களுக்கு இடையூறான இடத்தில் கட்டடம் கட்டப்படுவதாகவும், தரமான முறையில் கட்டப்படவில்லை எனப் பொதுமக்கள் கூறியதன் அடிப்படையில் கட்டடப் பணியைப் பார்வையிடச் சென்றேன்.
வேலையின் விபரம் குறித்த குறிப்பை பொதுப்பணித்துறை பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது விபரங்களைத் தர மறுத்துவிட்டார். பணி நடைபெறும் இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, ஒப்பந்ததாதரோ இல்லை.
வேலை விபரம் குறித்து விளம்பர பலகை இல்லை. வேலை செய்யும் நபர்களிடம் விசாரித்த போது எங்களுக்கு விபரம் ஏதும் தெரியாது எனக் கூறிவிட்டனர்.
இந்த இடத்தில் காமராஜர், கக்கன் போன்றவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர். மேலும் இந்த இடம் அரசு விழாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும். எனவே இந்த இடத்தில் கட்டடம் கட்டினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்.
இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தார்.