தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி பறிமுதல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, போடியில் புதன்கிழமை அரசின் தடை உத்தரவை மீறி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட கோழி, ஆடு, மாட்டு இறைச்சிகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கடைகளில் இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து, போடி நகராட்சி நிர்வாகம் சார்பில் இறைச்சி விற்பனைக் கடைகளுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த கடைகளில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான், முத்துக்கிருஷ்ணன், தர்மராஜ், செந்தில், பாலமுருகன், மேற்பார்வையாளர்கள் கருப்பணன், முருகதாஸ், இளங்கோ ஆகியோர் சோதனை நடத்தி, மொத்தம் 100 கிலோ எடையுள்ள கோழி, ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளைக் கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.