தினமணி 05.05.2010
தண்ணீர் பாக்கெட் தடை சாத்தியமா?
சென்னை, மே 4: சென்னையில் பாலிதீன் பாக்கெட்களில் அடைத்து குடிநீர் மற்றும் மோர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய தமிழக அரசின் அனுமதி கோரும் தீர்மானம் மாநகராட்சியின் கடந்த மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கெட்களில் குடிநீர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்வதுசாத்தியமா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
பஸ்களிலும், ரயில்களிலும் நீண்டதூரப் பயணம் செல்லும் பொது மக்கள் ஓரளவுக்கு மட்டுமே வீட்டிலிருந்து குடிநீரை எடுத்துச் செல்ல முடிகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குடிநீர் தீர்ந்துவிடும் பட்சத்தில், எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் எளிதாக இருப்பதால் பாக்கெட் குடிநீரை மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தொட்டிகளில் வைக்கப்படும் குடிநீரின் தரமும், அவை பராமரிக்கப்படும் விதமும் சரியாக இல்லாததும் பாக்கெட் குடிநீரை மக்கள் அதிகம் நாடுவதற்கு ஒரு காரணம்.
மக்கள் கூடும் பொது இடங்களிலும், குடிசைவாழ் பகுதிகளிலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதில் நமது உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்ததே இதற்கு உண்மையான காரணம் என்பதில் ஐயமில்லை.
அரசின் விதிமுறைகளை உரிய விதத்தில் கடைப்பிடிக்காமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கும், இது சாதகமான ஒன்றாக இருப்பது கடந்த சில ஆண்டுகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதையடுத்து, பாலிதீன் பாக்கெட்களில் அடைத்து குடிநீர், மோர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சியில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பாக்கெட்கள் விற்பனைக்கு வரத் தொடங்கிய சமயத்தில் பொது இடங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கிடைப்பதில் இருந்த சூழலுக்கும் தற்போதை நிலைக்கும் எந்தவித பெரிய மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
தண்ணீர் பாக்கெட்கள் தடை செய்யப்பட்டால், பொது இடங்களில் கூடும் மக்களும், குடிசைப் பகுதி மக்களும் குறைந்த செலவிலான தண்ணீர் தேவைக்கு என்ன செய்வார்கள்?.
இதற்கு மாநகராட்சியின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதே சமூக ஆர்வலர்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ள கேள்வி.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுத்தமான தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தண்ணீர் பாக்கெட்களுக்கான அரசின் தர விதிமுறைகள் அமலாக்கத்தை உறுதி செய்ய மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். இதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக பாக்கெட் குடிநீரை தடை செய்வது என்பது பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அதே சமயத்தில் தண்ணீர் பாக்கெட்களுக்கு மாற்றாக பொது இடங்களில், குடிநீர் எளிதில் கிடைக்க என்ன வழி? என குடியிருப்போர் சங்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான பி. விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீரை வழங்க “ரயில் நீர்‘ என்ற பெயரில் ரயில்வே துறை மேற்கொண்டுள்ளத் திட்டம் போல சென்னையில் குறைந்த விலையில், தரமான குடிநீர் கிடைக்க மாநகராட்சியும், குடிநீர் வழங்கல் வாரியமும் இணைந்து புதியத் திட்டத்தை வகுத்து செயல்படுóத்தலாம்.
இத்தகைய திட்டத்தை தொடங்கி செயல்படுத்துவதன் மூலம்தான் தனியார் நிறுவனங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு அனுப்பும் தண்ணீர் பாக்கெட்களை முற்றிலுமாக தடை செய்ய முடியும் என பல்வேறு சமூக ஆர்வலர்களும், நுகர்வோர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து பேசி இந்த விஷயத்தில் மாற்றுத் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.