தினமலர் 19.04.2010
தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள், கேன்கள் பறிமுதல்
சென்னை : சென்னையில் விற்கப்படும் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்த மாநகராட்சி செய்திக் குறிப்பு: மயிலாப்பூரில் ஆர்.கே.மடம் சாலை, செயின்ட் மேரீஸ் சாலை, லஸ் கார்னர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 10 ஆயிரம் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப் பட்டு, அழிக்கப்பட்டன. மேலும், மயிலாப்பூரில் ஒரு லாரியில் 273 கேன்களில் தரமற்ற குடிநீர் அடைக்கப்பட்டிருந்ததை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து, அழித்தனர். இந்த குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் ‘பேட்ச்‘ எண்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகளை வாங்கி பருக வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.