தினகரன் 26.08.2010
தர்மபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனை விற்பனை நிலம் வாங்கியவர்கள் தவிப்பு
தர்மபுரி, ஆக.26: தர்மபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிக கமிஷனுக்கு ஆசைப்படும் புரோக்கர்களால் நிலம் வாங்குவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிகளில் வீட்டுமனைகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விளை நிலங்கள், தரிசு நிலங்களில் நம் விருப்பம்போல் வீடுகளை கட்டிவிடமுடியாது.
உள்ளாட்சி அமைப்புகளில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடியும். விவசாயம் செய்யும் நிலங்களை உடனடியாக வீட்டு மனைகளாக மாற்றிவிட முடியாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது அந்த நிலம் விவசாய பயன்பாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் வீட்டு மனைகளின் விலை உயர்வை பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள் சிலர் தவறான தகவல்களை கூறி, அனுமதியில்லாத நிலங்களை விபரம் தெரியாத மக்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். இனிமையான பேச்சின் மூலம் மக்களை கவரும் புரோக்கர்கள், விலை குறைவு, போக்குவரத்து வசதி உள்ளது என்பதை மட்டும் கூறி நிலங்களை வாங்க வைக்கிறார்கள். இவர்கள் கமிஷனை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்கள்.
இவர்களது தவறான தகவல்களை நம்பி நிலத்தை வாங்குவோர், அதற்கு அனுமதி பெறமுடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள். இந்த நிலங்களுக்கு வங்கி கடனும் பெறமுடிவதில்லை.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அண்ணாத்துரை கூறும்போது, ‘தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் பெறாத பல இடங்களை பிளாட்டுகளாக மாற்றியுள்ளனர். இடம் வாங்குவோர், அனுமதி குறித்து நன்று விசாரிக்க வேண்டும். அனுமதி இல்லாத இடங்களில் மனைகளை வாங்கி வீடுகட்டினால் குடிநீர் இணைப்பு பெற முடியாது. மேலும் நகராட்சியில் இருந்து எந்தவிதமான ஆவணங்களையும் பெறமுடியாது.
வீட்டு மனைகளை வாங்குவோர் கவனமாக செயல்பட்டால், இது போன்ற குழப்பங்களை தவிர்க்கலாம்” என்றார்.
சென்னையை மிஞ்சும் தர்மபுரி தர்மபுரியைச் சுற்றியுள்ள இலக்கியம்பட்டி, சோகத்தூர், தடங்கம் ஊராட்சிகளில் சதுர அடி ரூ350 முதல்ரூ1500 வரை விலை நிலவுகிறது. சென்னையில் லே&அவுட் அனுமதி பெற்ற வீட்டுமனைகள் கூட இந்த விலைக்கு தான் செல்லும். ஆனால் இந்த ஊராட்சிகளில் அனுமதி பெறாமலே அதிக விலைக்கு வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி நகரத்தில் சதுரஅடி ரூ28 ஆயிரம் வரை செல்கிறது.