தினமலர் 16.06.2010
தாம்பரத்தில் நவீன விளையாட்டு திடல்
தாம்பரம் : தாம்பரம் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் வசதிக்காக நவீன விளையாட்டு திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் நகராட்சியில் சேலையூர், இரும்புலியூர், கல்யாண்நகர், திருநீர்மலை, வினோபா நகர், கன்னடப்பாளையம் பகுதிகளில் நகராட்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இந்த பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும் மாணவ, மாணவியர் வசதிக்காக விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருந்தது.இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறுவர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதில் சருக்கு, ஊஞ்சல் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், சேலையூர் நகராட்சி மேல்நிலை பள்ளியில் நவீன விளையாட்டு திடல் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடைபந்து மற்றும் ஓடுதளம் ஆகிய வசதிகளுடன் இது அமையும்.இதற்காக, சேலையூர் நகராட்சி மேல்நிலை பள்ளி மைதானத்தை அதிகாரிகள் நேற்று சர்வே செய்தனர். இதையடுத்து, மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.