தாராபுரம் நகராட்சி பகுதியில் அரசு நிலங்களை மோசடி செய்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நகர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத மனைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களை மோசடி செய்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது: பார்க் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரர்கள் பூங்காவை தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வரையில் வசூலிக்கப்பட்டது. இது குறித்து பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிர்வாக நடவடிக்கையாக தனியாருக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இனி மேல் நகராட்சி நிர்வாகம் நேரடியாக பூங்காவை பராமரிக்கும். பொது மக்கள் கட்டணம் ஏதும் இன்றி பூங்காவிற்கு வந்து செல்லலாம். விரைவில் பூங்கா மேம்படுத்தப்படும். நகர் பகுதியில் குறிப்பாக உடுமலை சாலை, அண்ணாசாலை, பூக்கடை கார்னர். பெரிய கடைவீதி, பொள்ளாச்சி சாலை, பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட பல பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த ஆட்டோ, டெம்போ, கார் ஸ்டாண்டுகள் பாதிப்பு இல்லாத வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப்பரிவுகளில் 23 இடங்களில் பூங்காவிற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள். இது தவிர நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள் மற்றும் அரசு நிலங்கள் பல பகுதிகளில் உள்ளது. இந்த நிலங்களை மோசடி செய்து விற்பனைசெய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை தவிர்க்கும் நோக்கத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இது சம்பந்தமாக முன்னெச்சரிக்கை தகவல்கள் தரப்பட்டுள்ளது.
பொது மக்கள் நகர எல்லைக்குள் நிலம், வீடு, வாங்குவதாக இருந்தால் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஆவணங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் நிலமோசடியை தவிர்க்கவும் குற்றச் செயல்களை தடுக்கவும் வாய்ப்புள்ளது.
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கும் பட்சத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்துதராது. கட்டிட அனுமதி மற்றும் குடிநீர் இணைப்பு மறுக்கப்படும். மேலும் பொது உபயோக இடங்களை முறைப்படி ஒப்படைப்பு செய்யாதவர்கள் உடனடியாக ஒப்படைப்பு செய்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறினார்.