தினமணி 16.02.2010
திடீர் குறைதீர் கூட்டம் நடத்திய மேயர்
சேலம், பிப்.15: சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷிணி திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி, மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
÷சேலம் மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதைப் போல் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இடையில் ஏனோ அது நிறுத்தப்பட்டது.
÷ஆட்சியர், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் நடத்தப்படுவதைப் போன்று மாநகராட்சியிலும் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து திங்கள்கிழமை அறிவிக்கப்படாமலேயே குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மேயர் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
÷அம்மாப்பேட்டை மண்டலத்தில் குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்ததாகவும், 53-வது வார்டில் மேலும் ஒரு ரேஷன் கடை தொடங்கவும், முதியோர் உதவித்தொகை கோரியும் மக்கள் மனு அளித்ததாக மேயர் ரேகா பிரியதர்ஷிணி கூறினார்.