தினமலர் 18.05.2010
தினமலர்‘ செய்தி எதிரொலி நடவடிக்கை எடுத்த நகராட்சி
மேலூர்: மேலூரில் சுகாதாரமற்ற உணவு பொருட்களை கண்டு கொள்ளாமல் இருந்த நகராட்சி அதிகாரிகள் ‘தினமலர்‘ இதழ் செய்திக்கு பிறகு நேற்று நடவடிக்கை எடுத்து, கடைகளில் உள்ள சுகாதாரமற்ற பொருட்களை அழித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மேலூரில் மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை சுட்டிக்காட்டி ‘சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்: மேலூரில் தாராள புழக்கம்‘ என்னும் தலைப்பில் நேற்று முன்தினம் ‘தினமலர்‘ இதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நேற்று துப்புரவு ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் சந்திரன், பாலசுப்பிரமணியன், ராஜரத்தினம், மயில்வாகனன் உட்பட நகராட்சி பணியாளர்கள் களத்தில் இறங்கினர். மேலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் செக்கடி வரையிலான குளிர்பான கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் நுழைந்து காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்தினர். ஜூஸ் கடைகளில் இருந்த பானங்களை சாக்கடையில் கொட்டி அழித்தனர்.
பெயரளவிற்கு ஒரு நாள் மட்டும் இந்த நடவடிக்கை எடுத்தால் போதாது. அதிகாரிகள் அடிக்கடி முன் அறிவிப்பு இல்லாமல் கடைகளில் நுழைந்து சோதனை செய்ய வேண்டும். நேற்று ஒரு சில கடைகளில் அதிகாரிகள் வரும் தகவல் முன்னதாக தெரிந்ததால் கடையை சுத்தமாக வைத்திருந்ததுடன், கடையை சுற்றி பினாயில் போன்றவற்றை தெளித்து சுகாதாரமாக இருப்பதாக காட்டிக் கொண்டனர்.