தினமணி 16.11.2009
திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
திருச்சி, நவ. 15: திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நவீன இயந்திரங்களைக் கொண்டு புகை மருந்து அடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில், கோ–அபிஷேகபுரம் கோட்டத்தைச் சேர்ந்த 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய 9 வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கப்பட்டது.
மண்டல பூச்சியியல் வல்லுநர் குழு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் மூலம் புகை மருந்து அடிக்கப்படுகிறது. மேலும், தண்ணீர்த் தொட்டிகள் உள்ளிட்ட கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் “அபேட்‘ மருந்துக் கலவை தெளிக்கப்படுகிறது. 6 நாள்களுக்கு ஒரு முறை வார்டுக்கு இரு துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆய்வுக் கூட்டம்
கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கொசுப் புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழித்தல், புகை மருந்து அடித்தல், மழைநீர் வடிகால்களை தூர் வாருதல், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:
“”மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், பகுதி சுகாதார பார்வையாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பார்வையாளர்கள் தங்களின் நகர்நல மையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி கொண்டவர்களுக்கு சிறப்பான மருந்துகளும், சீரிய மருத்துவ ஆலோசனைகளும் அளிக்க வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடித்தலை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களிடம் பல்வேறு முறைகளில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார் பால்சாமி.பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் எங்கு மழை நீர் தேங்கியிருந்தாலும், பொது மக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மாநகராட்சி நகர் நல அலுவலர் தொலைபேசி எண்: 2410520-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.