தினமணி 28.04.2010
திருச்சி மாநகராட்சியில் அனைத்துக் கட்சி கூட்டம்
திருச்சி, ஆக. 24: திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள சில பாகங்களை மாற்றம் செய்வது தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையரும், வாக்காளர் பதிவு அலுவலருமான த.தி. பால்சாமி தலைமை வகித்தார். மேயர் எஸ். சுஜாதா, துணை மேயரும், திமுக மாநகரச் செயலருமான மு. அன்பழகன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், அதிமுக மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி நடராஜன், மாமன்றக் கட்சித் தலைவர் ஜெ. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரத் துணைச் செயலர் ஏ.கே. திராவிடமணி, 60-வது வார்டு மாமன்ற உறுப்பினர் து. தங்கராஜ், தேசியவாத காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.பி. கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேற்கு மற்றும் கிழக்குத் தொகுதிகளில் உள்ள சில பாகங்களை வாக்குச்சாவடிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்வது தொடர்பாக, மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் த.தி. பால்சாமியிடம் அளித்த மனுக்களின் பேரில், இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்துக் கட்சிப் பிரமுகர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, மாமன்றத்தின் ஒப்புதலுடன், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிகிறது.