தினத்தந்தி 04.10.2013
திருச்சி மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை பதிவேட்டிற்கு
இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது
திருச்சி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை பதிவேட்டிற்கு இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இரண்டாம் கட்ட பணி
திருச்சி மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட மையங்களில் தேசிய மக்கள் தொகை
பதிவேடு தயாரிக்கும் பணி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து நடைபெற உள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட முதல் கட்டமாக நடைபெற்ற முகாம்களில் புகைப்படம்
எடுக்காதவர்கள் மற்றும் புகைப்படம் எடுக்க புதிதாக விண்ணப்பம் கொடுத்த 5
வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு
தங்களது புகைப்படம், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழிப்படலம்
ஆகியவற்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நபருக்கும் பிரத்யேக அடையாள
எண், அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 60 வார்டு வரை தேசிய மக்கள்
தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தாள் தயாரிக்கும் பணி இரண்டாம் கட்டமாக இன்று
(வியாழக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 150
பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். நாள் ஒன்றுக்கு 150
பேருக்கு டோக்கன் வழங்கப்படும். அதிகப்படியான நபர்கள் புகைப்படம் எடுக்க
வரும்போது அவர்களுக்கு அடுத்த நாள் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு
புகைப்படம் எடுக்கப்படும்.
அட்டையின் பயன்கள்
இந்த அடையாள அட்டையானது புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கும், இந்தியா
முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அடையாளத்தை நிரூபிக்க, அரசு நல திட்ட
உதவிகள் மற்றும் இதர சலுகைகள் பெற, வயது மற்றும் பிறந்த தேதி நிரூபிக்க,
வங்கி கணக்கு தொடங்க, பாஸ்போர்ட்டு பெற, வாகனங்கள் பதிவு செய்ய, தொலைபேசி,
கைப்பேசி எரிவாயு இணைப்பு பெற நிலம் பதிவுகள் திருமணம் பதிவுகள் போன்ற
எண்ணற்றவைக்கு பயன்படும்.
புகைப்படம் எடுக்கும் மையத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது
வழங்கப்பட்ட ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர்
உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட்டு, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை
ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.