திருச்செந்தூர்: குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி துரிதம்
திருச்செந்தூரில் மந்தகதியில் நடைபெற்று வந்த குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் குரங்கன்தட்டிலிருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்கான குழாய் பதிக்கும் பணி கோவிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இப் பணி கந்தசஷ்டிக்காகப் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலையோரம் போடப்பட்ட நீண்ட குழாய்களால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இவ் வழியே செல்லும் வழக்கமான தடப்பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களும் மிகுந்த சிரமத்தோடு சென்று வந்தன. இதுகுறித்து தினமணியில் வெளியான செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் குழாய் பதிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இப் பணி நிறைவு பெறும் பட்சத்தில் திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களுக்கு கூடுதலான குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.