தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
திருநீர்மலை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநீர்மலை ஜெயஸ்ரீ முத்துகுமாரசாமி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை திருநீர்மலை பேரூராட்சித் தலைவர்
வி.கலைவாணி காமராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, மனித வாழ்விற்கு மட்டுமல்லாமல் அனைத்து
உயிர்களுக்கும் நீர் உயிர்ஆதாரமாகத் திகழ்வதால் இயற்கை நமக்கு வான் மூலம்
வழங்கும் மழைநீரை நாம் துளிகூட வீணாக்கக் கூடாது. அதை செல்வமாகக் கருதி
சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்வது அவசியம் என்றார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் உயிர்த்துளியாய் வரும் மழைத்துளியை வீணாக்காமல்
பூமியில் சேமிப்போம், நிலத்தடி நீர் உயர மழைநீர் சேமிப்போம் என்பன
உள்ளிட்ட வாசகங்கள் பொறித்த பதாகைகள் ஏந்தி, திருநீர்மலை பேரூராட்சியின்
முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். திருநீர்மலை பேரூராட்சி செயல்
அலுவலர் வி.பிரேமா, பேரூராட்சி உறுப்பினர்கள் பி.ஷர்மி, சண்முகம்,
வி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றனர்.