தினமணி 23.03.2013
தினமணி 23.03.2013
திருப்பரங்குன்றம் பகுதியில் தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம்: மேயர்
திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் சுற்றியுள்ள
பகுதிகளுக்கு தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.
மாநகராட்சிக்குள்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர்
தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வது
தொடர்பாக மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் மற்றும்
அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
மூலக்கரையில் நீர்உந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
லாரிகளில் குடிநீர் நிரப்பும் நிலையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
இங்கிருந்து லாரிகளில் குடிநீரை நிரப்பி திருப்பரங்குன்றம் மற்றும்
சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிகக்கும் பணியை மேயர் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம், தென்கரை கண்மாய், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள
பழைய ஆழ்குழாய்கள் சீர்செய்யப்பட்டு மூலக்கரையில் உள்ள குடிநீர் உந்து
நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, லாரிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு
விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக வார்டு 95 முதல் 99 வரையிலான அதாவது திருப்பரங்குன்றம்,
ஹார்விபட்டி, திருநகர், பாண்டியன் நகர், நெல்லையப்பபுரம், சுந்தர் நகர்,
எஸ்ஆர்வி நகர் ஆகிய பகுதிகளுக்கு 2 லாரிகளில் தினமும் 2 லட்சம் லிட்டர்
குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சின்டெக்ஸ்
தொட்டிகள் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
நிகழ்ச்சியின்போது, உதவி ஆணையர் அ.தேவதாஸ், மாமன்ற உறுப்பினர்கள்
முத்துக்குமார், அமீதாபேகம், நாகலட்சுமி, பாண்டுரங்கன், சந்தியா,
பூமிபாலகன், செயற்பொறியாளர் ஜெயசீலன், உதவி செயற்பொறியாளர் திருஞானம்,
பொறியாளர் சேகர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், அருள்தாஸ்புரம் பொறியாளர் அலுவலகத்தில் வார்டு 8, 9 ஆகிய
பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த ஆலோசனைக்
கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.
இப்பகுதிகளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்குமாறும்,
பழுதாகியுள்ள போர்வெல்களை மராமத்து செய்வதுடன், குடிநீர் மோட்டார்களை
சரிசெய்து இயக்க ஏற்பாடு செய்யுமாறும் மாமன்ற உறுப்பினர் தாஸ் கோரிக்கை
வைத்தார்.
இப்பிரச்னைகளுக்கு உடனே தீர்வுகாணுமாறு பொறியாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.