தமிழ் முரசு 27.04.2013
திருமழிசை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம்
திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி
தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்குமார், துணை தலைவர் மகாதேவன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: திருமழிசை பேரூராட்சியில் ரூ.20 கோடியே 47 லட்சம்
மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது.
தற்போது
திருத்திய மதிப்பீடு தொகை ரூ. 30 கோடியே 60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகையான ரூ. 10 கோடியே 19 லட்சம் நிதியை பேரூராட்சி, சென்னை
பெருநகர் வளர்ச்சி குழும குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று
வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று மேலாண்மை இயக்குநரின் கடிதம்
மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பேரூராட்சியில் பாதாள சாக்கடை
திட்டப்பணியால் சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை மாற்றவும், அதற்கான தொகையை
வழங்கவும், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பழுது பார்த்து
வண்ணம் பூசுவது, மடவிளாகம், பஜனை கோயில் தெருவில் பொதுநிதி மூலம் சாலை
அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள்
முனுசாமி, திருநாவுக்கரசு, கருணாநிதி, சந்திரன்,வி. சங்கர், முருகன்,
பாஸ்கரன், மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.