தினமணி 22.01.2014
திருமழிசை பேரூராட்சியில் திறப்பு விழாவுக்கு தயாராகும் பாதாளச் சாக்கடைத் திட்டம்
திருமழிசை பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது திருமழிசை பேரூராட்சி.
இந்த பேரூராட்சிக்கு உள்பட்ட 21 கிலோமீட்டர் நீள சுற்றளவுக்கு பாதாளச் சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக ரூ.20.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இதையடுத்து பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமடைந்து நிதிப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு கூடுதல் நிதியாக ரூ.10.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.30.60 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்பணி தற்போது 97 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது சில இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 15 தினங்களில் அப்பணிகளும் நிறைவடைந்துவிடும் எனவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையொட்டி அடுத்த மாதத்தில் தமிழக முதல்வரால் காணொலிக் காட்சி (விடியோ கான்பிரன்ஸ்) மூலம் இத்திட்டத்தை தொடங்கிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் மக்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டணம் மற்றும் வைப்புத்தொகை விவரம்:
பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் மூலம் வீடுகளின் இணைப்புகளுக்காக வைப்புத் தொகை மற்றும் மாதாந்திரக் கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளது.
இதையொட்டி திருமழிசை பேரூராட்சியில் 300 சதுர அடி கொண்ட வீட்டுக்கு வைப்புத்தொகை ரூ.3 ஆயிரம், மாதக்கட்டணமாக ரூ.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 300 முதல் 600 சதுர அடி கொண்ட வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ.150 மாதக் கட்டணம், 600 முதல் 1000 சதுர அடிக்கு ரூ.15 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ.200 மாதக்கட்டணம், 1000 முதல் 2 ஆயிரம் சதுர அடி வரை ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ. 250 மாதக்கட்டணம், 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ரூ.40 ஆயிரம் வைப்புத் தொகை, ரூ.500 மாதக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை மற்றும் மாதக்கட்டணம் ரூ.2,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.