தினமலர் 02.03.2010
திருவிழா கடை வியாபாரிகளிடம் மாமூல் : பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை
மானாமதுரை: சித்திரை திருவிழா கடைகளில் மாமூல் கேட்டு, வியாபாரிகளை மிரட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை பேரூராட்சி தலைவர் ராஜாமணி எச்சரித்தார். பேரூராட்சி கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர்.
விவாதங்கள் வருமாறு:
அழகர்சாமி (தி.மு.க.,): சித்திரை திருவிழாவுக்காக, வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். வியாபாரிகளிடம் அரசு ஊழியர்,போலீசார், ரவுடிகள் மாமூல் வசூலிக்கின்றனர். இதனால் ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். (இதை தவிர்க்க பேரூராட்சியே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.)
செயல் அலுவலர்: திரு விழாவுக்காக தனியாக வரிவிதிக்கப்படுவதில்லை.
தலைவர்: மக்களிடம் கூடுதல் கட்டணத்தை நாமே சுமத்தக்கூடாது. வியாபாரிகளை மிரட்டி வசூலித்தால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சோமன் (தி.மு.க.,): புதிய கட்டடங்கள் விதிகளின்படி கட்டப்படுகின்றனவா? என அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.
துணை தலைவர்: பொது இடத்தையும் ஆக்கிரமித்து கட்டுகின்றனர்.
சந்திரசேகரன் (அ.தி.மு.க.,): கழிவுநீர் கால்வாயில் குப்பை தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்துள் ளது. பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.
செயல் அலுவலர்: பாதாள சாக்கடை அமைக்க 25 ஏக்கர் நிலம்; பேரூராட்சியின் பங்காக, மொத்த மதிப்பில் நான்கில் ஒரு பங்கு நிதி தேவைப்படும். உள்ளாட்சி துறை தான் முடிவு செய்ய வேண்டும்.
ஜெயப்பிரகாஷ் (தே.மு.தி.க.,): “பை பாஸ்‘ ரோட்டில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதடைகின்றன. அவற்றை சரி செய்வதில்லை. ரயில்வே பாலத்தில் கைப்பிடி சுவர் இல்லாததால், விபத்து அபாயம் உள்ளது.
தலைவர்: இதுகுறித்து தேசியநெடுஞ்சாலை அலுவலகத்தில் பல முறை தெரிவித்து விட்டோம், நடவடிக்கை இல்லை.
துணை தலைவர்: பக்கவாட்டு சுவரை நாமே அமைக்கலாம்.
தலைவர்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சமுதாய கூடம், மயான மேம்பாடு, பூங்கா போன்ற பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
கணேசன் (தி.மு.க.,): எங்கள் பகுதியில் மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
தலைவர்: மயானத்தை சீரமைக்க, அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஏழு வார்டுகளை உள்ளடக்கிய ஆதனூர் மயானத்தை முதலில் சீரமைக்கலாம். தொடர்ந்து மற்றவை சீரமைக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.